முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமலஹாசன் 65 வது பிறந்த நாள் பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலையினை திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி - நடிகர் கமலஹாசனின் 65 வது பிறந்த நாள் விழா, அவரது தந்தை  விடுதலை போராட்ட வீரர் வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா மற்றும் மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா ஆகியவை பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூரில் நடந்தது.
விழாவில் நடிகர் கமலஹாசன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.விழாவின் தொடக்கமாக மரக் கன்றை நட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியினை நடிகர் கமலஹாசன் ஏற்றி வைத்தார்.கட்சியின் மாநில துனைத் தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.பின்பு, நடிகர் பிரபு, கட்சியின் பொதுச் செயலாளர் குமாரவேல், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கமலஹாசனை வாழ்த்திப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து நடிகை சுகாசினி கமலஹாசனின் குடும்ப உறுப்பினர்களான அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கமலஹாசனின் சிறுவயதில் தூக்கி வளர்த்த தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரையும் ,கமல் தந்தை சீனிவாசன் சிலையினை வடிவமைத்த வேன்ஸ் என்பவரையும் கமலஹாசன் கவுரவித்தார்.பின்பு ஒரிஸ்ஸா பல்கலைக் கழகத்துடன் இணைந்து தெளிச்சாத்தநல்லூரில் தொடங்கப் படவுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
      அதனை தொடர்ந்து, நடிகர் கமலஹாசன் அவரது தந்தை சீனிவாசனின் உருவச்சிலையினை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து வணங்கினார்.பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில், நடிகர் கமலஹாசன் பேசியதாவது :-
எனது பிறந்த நாளும்,தந்தை மறைந்த நாளும் ஒன்றாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.நான் நன்றாக வருவேன் என எனக்காக பல திட்டங்களை தினமும் தீட்டிக் கொண்டிருந்தார் எனது தந்தை.பின்பு காலேஜில் சேர்ந்து ஐ.ஏ.எஸ் .படிக்கச் சொன்னார். உடனே நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி.பாஸ் பண்ண வேண்டும்.பின்பு படிக்க வேண்டும். இயக்குநர் பாலச்சந்தர் காட்டிய வழியில் செல்கிறேன் என கூறினேன்.எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் திறமையானவர்கள்.அற்புதமான குடும்பம்.தலைமை பொறுப்பிற்கு தகுதியாக திகழ்ந்தவர் எங்கள் அப்பா.
எனக்கு அவரது ரெளத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும்.அது என்னுடன் வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் விட்ட விதை அவர் காட்டிய வழிதான் இங்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக வந்துள்ளது.
சென்னை சென்ற எனக்கு நிழலாக இருந்த பாலச்சந்தருக்கு  சென்னையில் அலுவலகத்தில் சிலை  திறக்கவுள்ளேன். இது பூஜைக்கான உருவம் அல்ல. பின்தொடர வேண்டிய உருவங்கள்.எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசான்கள் எல்லாம் மெல்ல மெல்ல தகப்பனார்களாக மாறிவிட்டனர்.
கமலஹாசன் என்ன படித்திருக்கிறார்?  என்று சொல்வதற்கெல்லாம் ஒன்றுமில்லை.இரண்டு மூன்று ஸ்கில் தெரியும்.அதை வைத்துதான் பேசுகிறேன்.
அரசியல் பக்கம் செல்ல எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.ஒரே ஒருவர் தான் அதை பல காலமாக சொல்லி பேசிக் கொண்டிருப்பார்.அதை நாங்கள் பேச்சை மாற்ற உதாசினப் படுத்திக் கொண்டிருப்போம்.தற்போது அவரது ஆசையும் நிறைவேறியுள்ளது.
நீங்கள் எல்லாம் சுதந்திர போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. நாட்டிற்கே தேவையாக இருந்தது. அதனால் செய்தீர்கள். நான் ஏன் அரசியலுக்கு போக வேண்டும் என்றேன்.அப்படி ஒரு போராட்டம் மறுபடியும் வந்தால் என கேட்டார்.கிட்டத்தட்ட தற்போது அந்தநிலை வந்துள்ளது.அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.
இங்கு அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பரமக்குடி மக்களுக்காக எங்கள்குடும்பத்தின் சார்பில் நாங்கள் தரும் அன்பு பரிசு. கூலி வேலை செய்து கஷ்டப் பட்டு படித்து வேலை இல்லாத நிலை நம் நாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 61 லட்சம் மாணவர்கள் ஆரம்ப பள்ளிக்கு செல்கின்றனர். நடுநிலைக்கு வரும்பொழுது 58 லட்சமாக குறைகிறது.எஸ்.எஸ்.எல்.சி.க்கு வரும்போது 11 லட்சமாக குறைகிறது. டிகிரிக்கு வரும்போது 3 லட்சம் பேர் தான் போகிறார்கள்.மீதமுள்ள இளைஞர்களின் நிலை என்ன? அந்த கமலஹாசன்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன?துப்புரவு பணிக்கு பி.கெச்.டி.படித்தவர்கள் விண்ணப்பிக்கும் அவலநிலை இங்கு வந்துள்ளது.
அதற்கு காரணம் நமது திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை.வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்து செல்லக்கூடாது என்பதுதான் எங்களது ஆசை.அதற்காகத் தான் இதை செய்கிறோம்.இது ஒரு திறமை வளர்ப்பு பஞ்சாயத்தாக ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை.இங்கிருந்தே பல தொழில்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை உருவாக வேண்டும்.நான் பணக்கார வீட்டு பையன் திமிருக்காக விளையாடி பார்க்கிறேன் என நினைப்பார்கள். நான் சலூனில் ஒன்றரை மாதம்  வேலை செய்துள்ளேன். பின்பு அங்கிருந்த ஓனர் போட்டு கொடுத்து விட்டார்.அங்கு கிடைத்த பாடம் தான் எனக்கு பிற தொழில்களுக்கு பாடமாக இருந்தது.அப்படி இல்லையென்றால் நான் எடிட்டிங்பற்றியோ,கேமராவை பற்றியோ நினைத்திருக்க மாட்டேன்.எந்த தொழிலும் நமக்கு கீழானது இல்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கை தரமும் உயரும்.
ஒரே இன்சீனியராக,வக்கீல்களாக இல்லாமல் ஒரு ஊரில் ஓரே தென்னை மரங்களாக இல்லாமல் வெவ்வேறு பயிர்களாக இருந்தால் செழிப்பான நாடு என தோன்றும்.அதைப்போல் இங்குள்ளவர்கள் திறமையான தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் தொழில் விற்பனர்களாகி வேலை வாய்ப்பை அளிக்கும் முதலாளிகளாக மாற வேண்டும்.
சத்தியாகிரக போராட்டத்திற்கு பிறகு இந்தியா திறமை வளர்ப்பு போராட்டத்தில் தமிழகம் இன்னும் முழுமையாக இறங்காமல் உள்ளது என்பது கண்கூடாக தெரியும் உண்மை.மற்ற மாநிலங்களில் இந்த நிலை செயல் வடிவத்திற்கு வந்து நடந்து கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்க பல்கலை கழகங்கள் மட்டும் இருந்தால் போதாது.பட்டாளத்திற்குசென்று இறப்பவர்களின் எண்ணிக்கையை விட  சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.எந்த வேலை கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேற வேண்டும்.இலவசத்தை கொடுத்தால் வாங்குங்கள்.ஆனால் அது 3 மாதங்கள்தான் இருக்கும்.அதுகோளாறு ஆகிவிட்டால் அதை சரிசெய்ய எங்கள் மய்யத்தில் இருந்து தான் வரவேண்டும். நாங்கள் தருவது வாழ்நாள் முழுவதும் தங்கும்.5 வயதில் பரமக்குடியில் எனது அண்ணி பிறந்த நாள் கொண்டாடினார்.அப்போது எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சினிமாவிற்கு வந்தபோதும் பிறந்தநாள் கொண்டாடியதும் சந்தோஷம் இல்லை.ஆனால் தற்போது கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இது பல வாழ்க்கைக்கு ஆரம்பம்.அதை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும் இவ்வாறு பேசினார். ராமநாதபுரம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து