சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      தமிழகம்
CM Edappadi greet AP Shahi 2019 11 11

சென்னை : சென்னை ஐகோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதி ஏ.பி. சாஹிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி திடீரென மேகாலயா தலைமை நீதிபதியாகவும் மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டல் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. தனது மாற்றத்தைப் பரிசீலிக்கும்படி தலைமை நீதிபதி தஹில் ரமானி கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்ததால் மேகாலயா தலைமை நீதிபதி, சென்னை தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி அன்று, தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றதாக சட்ட அமைச்சகம் அறிவித்து புதிய தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்கும் வரை மூத்த நீதிபதி வினித் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக வழக்குகளை பார்ப்பார் என உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தலைமை நீதிபதி இல்லாமலேயே ஐகோர்ட் செயல்பட்டு வந்தது. இதையடுத்து கொலிஜியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை மத்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றி பரிந்துரைத்தது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏபி.சாஹி பெயரை கொலிஜியம் பரிந்துரைத்தது. திரிபுரா தலைமை நீதிபதி சஞ்சய் கரோலை பாட்னா தலைமை நீதிபதி பதவிக்கு கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி பரிந்துரைத்தது. இந்நிலையில் புதிய தலைமை நீதிபதி இன்று (நேற்று) பதவி ஏற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிண்டி ராஜ்பவன் மாளிகையில் உள்ள கவர்னர் மாளிகையில் சென்னை ஐகோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், மூத்த நீதிபதிகள், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்புவிழா முடிந்த பின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர் சி.வி.சண்முகம், மூத்த வழக்கறிஞர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஏ.பி.சாஹி என்கிற அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள தம்குஹி எனும் ராஜ வம்சத்தில் 1959-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தவர். 1985-ல் சட்டப்படிப்பை முடித்த பின் அலகாபாத் ஐகோர்ட்டில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே அலகாபாத் ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாகவும், 2005-ம் ஆண்டு நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ.பி.சாஹி பொறுப்பேற்றார். 15 மாதங்கள் அங்கு பணியாற்றிய நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் பாட்னா தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த போது புகழ் பெற்ற என்.எச்.ஆர்.எம் வழக்கு மற்றும் ஜி.பி.எப். ஊழல் வழக்கில் சிறப்பாக தீர்ப்பளித்ததாகப் பாராட்டப்பட்டார். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.பி.சாஹி ஓய்வு பெறும் நிலையில் சென்னை ஐகோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக தற்போது அவர் பதவியேற்றுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து