முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கோவை : தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்பது சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற, வெற்றி மூலமாக நிரூபணமாகி விட்டது. ரஜினிகாந்த் இப்போதும் ஒரு நடிகர்தான். அவர் இன்னும் கூட, கட்சி ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்திடம், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக முன்பு கூறிய உங்கள், நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருகிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று திட்டவட்டமாக ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து கூறியுள்ளார்.

இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் வரும் 15, 16-ம் தேதிகளில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று ஏற்கனவே அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். அதே கருத்தை தற்போது முதல்வரும் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் தங்கள் பேட்டியின் போது இதை தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனத்  தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து