முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுவாழ்வில் எனக்கு கிடைக்கும் பதவிகளும், விருதுகளும் அம்மாவுக்குத்தான் உரித்தானவை - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

சிகாகோ : பொதுவாழ்வில் எனக்கு கிடைக்கும் இந்தப் பதவிகளும், பாராட்டுகளும், விருதுகளும் அம்மாவுக்குத்தான் உரித்தானவை என்று சிகாகோவில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கப்பட்டது. அப்போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,

எனக்கு சர்வதேச வளரும் நட்சத்திம் ஆசியா விருதினை வழங்கி கவுரவப்படுத்தி இருப்பதற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஏதோ சாதித்து விட்டோம் என்ற நினைப்பில் இல்லாமல் - மிகப்பெரிய பொறுப்பு - புதிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உணர்வுடன் இந்த விருதினை ஏற்றுக் கொள்கிறேன்.   இந்த விருதினை தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.  உலகத்தின் பழமையான நவீன ஜனநாயகத்திற்கும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கும் இடையிலான ஆழமான உறவினை அங்கீகரித்து இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருக்கும் நான், ஒருவர்  தொடர்ந்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு பொதுப்பணியாற்றவது எத்தகையை சவால் நிறைந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன். நான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. அந்த வாய்ப்பினை இந்த விருது வழங்கும் விழா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  இந்தப் பயணம் மிகப்பெரிய அனுபவம்.  உங்களது பாராட்டு மழைக்கு இடையில் - எனது மாபெரும் தலைவரும், எனக்கு அரசியல் குருவுமான மறைந்த தமிழக முதல்வர் அம்மாவைத்தான் இந்த நேரத்தில் நான் நன்றியுடனும், மிகுந்த பிரார்த்தனையுடனும் நினைத்துப் பார்க்கிறேன்.  என்னை அரசியலில் ஆளாக்கியவர் அம்மாதான். இன்று பொதுவாழ்வில் எனக்கு கிடைக்கும் இந்தப் பதவிகளும், பாராட்டுகளும், விருதுகளும் அம்மாவுக்குத்தான் உரித்தானவை.  சிகாகோ நகரத்திற்கும், அம்மாவுக்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. சிகாகோவில் உள்ள தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்புதான் அம்மாவுக்கு தங்க தாரகை விருது வழங்கி கௌரவித்தது. அம்மா விருது பெற்ற சிகாகோ மண்ணில் நான் விருது பெறுவது எனக்கு கிடைத்த பெரும்பேராக எண்ணுகிறேன். இந்த நேரத்தில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கும், குறிப்பாக சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் சிகாகோ வாழ் தமிழ் சமுதாயத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை எல்லாம் பார்த்து தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து