மக்களின் தொடர் போராட்டத்தால் பொலிவியா அதிபர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      உலகம்
Bolivia Chancellor resign 2019 11 12

லாபாஸ் : மக்களின் தொடர் போராட்டத்தால் பொலிவியா அதிபர் ராஜினாமா செய்தார்.  

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்து வந்தவர் இவோ மோரலஸ். கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் 4-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் இவோ மோரலசுக்கும், முன்னாள் அதிபரும், புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.  

எனினும் தேர்தலில் அதிபர் இவோ மோரலஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளை நிராகரித்தன. மேலும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டின. இதையடுத்து, அதிபர் இவோ மோரலசின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. தொடர் போராட்டத்தால் பொலிவியாவில் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ராணுவம் வலியுறுத்தியது. மக்கள் மற்றும் ராணுவத்தின் தொடர் அழுத்தத்துக்கு அடிபணிந்து அதிபர் இவோ மோரலஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எனது ராஜினாமா கடிதத்தை பொலிவியா நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட்டேன். எனவே எனது சகோதர, சகோதரிகளே போராட்டங்களை கைவிடுங்கள். தாக்குதலை நிறுத்துங்கள்” என கூறினார். அதிபரின் ராஜினாமா குறித்த தகவல் வெளியானதும் தலைநகர் லா பாஸ் மற்றும் பிற நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், ஆடி, பாடியும் கொண்டாடினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து