முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மராட்டிய மாநிலத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க இயலாமல் போனது. தொடர்ந்து இழுபறி நிலை நீடித்ததால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மாநில கவர்னர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள். சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க கவர்னர் மறுத்து விட்டார்.

அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி நேற்று இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார். இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறினார். இருந்தாலும் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்து உள்ளார்.

இதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து