திருப்பதியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய தடை

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      ஆன்மிகம்
Tirupati 2019 07 03

திருப்பதியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை- திருப்பதி தேவஸ்தான துறை தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஜலபிரசாதினி திட்டத்தின் கீழ் திருமலையில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட புனித நீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கு பிளாஸ்டிக், சில்வர் டம்ளர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் நிரந்தரமாக பேப்பர் டம்ளர்கள் வைக்கப்படும்.

தங்கும் விடுதிகளில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மற்றும் காகித கப் வைக்கப்படும். குளியல் அறைகளில் இரும்பு வாளி, எவர்சில்வர் மக்குகள் வைக்கப்படும்.

முதல் கட்டமாக, தேவஸ்தானத்தின் அனைத்து துறைகளிலும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரும்பு, எவர்சில்வர், பேப்பரால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படும்.

திருமலையில் உள்ள ஓட்டல்கள், சிற்றுண்டிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல், சிற்றுண்டி உரிமையாளர்களை நேரில் வரவழைத்து, தேவஸ்தான சுகாதாரத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். இன்னும் ஒரு மாதத்துக்குள் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

திருமலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. குடிநீர் வினியோக ஏஜென்சிகள் விரைவில் குடிநீர் பாட்டில்களை திருமலைக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. திருமலைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான உரிமமும் ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பதியில் உள்ள அலிபிரி டோல்கேட், திருமலையில் உள்ள ஜி.என்.சி. டோல்கேட்டை கடந்து சரக்கு வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களில் திருமலைக்கு குடிநீர் கொண்டு வருவது தவிர்க்கப்படும். அதற்கான நடவடிக்கையை தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். திருமலையில் இரு வாரங்களுக்கு முன்பு லட்டு டோக்கன் மோசடியில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இலவச தரிசனம், திவ்ய தரிசனம் ஆகியவற்றில் லட்டு டோக்கன்கள் வழங்குவது இருமுறை ஸ்கேன் செய்யப்படும். இவ்வாறு செய்வதால், மோசடிகள் நடப்பது தடுக்கப்படும். திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சுகளில் பூட்டு, சாவி வழங்கப்பட்டு வருகின்றன. ஒருசில நேரத்தில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முதலில் பக்தர்களுக்கு சாவி வழங்கப்படும்.

அந்த சாவியை எடுத்து சென்று சம்பந்தப்பட்ட நம்பரில் உள்ள லாக்கரின் பூட்டை திறந்து பொருட்களை வைத்துக் கொள்ளலாம். பின்னர் லாக்கரை காலி செய்யும் சாவி, பூட்டு ஆகியவற்றை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். திருமலையில் கவுஸ்தபம், பாஞ்சதான்யம், நந்தகம், வகுளா ஆகிய விடுதிகளில் அறைகள் வாடகை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விடுதிகளில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடப்பது தவிர்க்கப்படும். பக்தர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து