சபரிமலை மற்றும் ரபேல் தொடர்பான வழக்குகள் : சீராய்வு மனுக்கள் மீது இன்று காலை தீர்ப்பு சுப்ரீம் கோர்ட் வழங்குகிறது

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      இந்தியா
supreme-court 2018 10 24

சபரிமலை மற்றும், ரபேல் தொடர்பான  3 முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கிவிட்டது.

தலைமை நீதிபதி ஓய்வு பெற இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், அதற்கு முன் அவர் தலைமையிலான அமர்வில் உள்ள 3 முக்கிய வழக்குகளில் இன்று  தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக ராகுல் பேசியிருந்தார். ராகுல் பேசியதற்கு எதிராக பா.ஜ.க எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த டிசம்பர் 14 - ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இதேபோல் சபரிமலை மறுசீராய்வு மனு மீதும் இன்று  தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது இன்று  காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து