வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி

திருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் வழங்காவிட்டாலும் சபரிமலை செல்வோம் என்று பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் உறுதியாகத்தெரிவி்த்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையே பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு வரும் 16-ம் தேதி செல்லப் போகிறேன் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது என தெரிவித்திருந்தார்.
இது குறித்து பெண்கள்நல ஆர்வலர் திருப்தி தேசாய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், வரும் 20-ம் தேதிக்குப்பின் சபரிமலை கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். நான் அங்கு செல்லும் முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பம் அளிப்போம். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம். ஒருவேளை கேரள அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டாலும்கூட நான் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.