முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின் டெண்டுல்கர்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : அழுவது அவமானத்துக்குரியதல்ல, உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எழுதி உள்ள கடித்ததில் கூறி இருப்பதாவது:-

விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சில வேளைகளில் தோற்றுப்போவீர்கள். உடைந்து அழுது விட வேண்டும் எனத்தோன்றும். எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடலாம் எனத்துடிப்பீர்கள்.

ஆனால், கண்டிப்பாகக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதிமிக்கவராக நடிப்பீர்கள். ஏனெனில், அதைத்தான் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆண்மகன் அழுதால் பலமிழந்து விடுவான் என நம்ப வைக்கப்படுகிறோம். நானும் இதை நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே உனக்கு இம்மடலை எழுதுகிறேன். என் போராட்டங்கள், வலிகள்தான் நீங்கள் அறிந்த சச்சினை உருவாக்கின. அவையே என்னைச் செதுக்கின.

16-11-2013. நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. எல்லாம் முடியப்போகிறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. எதையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் அதைத்தடுக்கத் துளியும் போராடவில்லை.

உலகத்தின் முன் உடைந்து அழுதேன். ஆச்சரியப்படும்வகையில், ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக, எனக்குக் கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். நான் போதுமான அளவு ஆணாக உணர்ந்தேன். கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள். உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும். அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து