முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயுடன் பச்சரிசி கரும்பு பரிசுத்தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கள்ளக்குறிச்சி : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை வைத்து அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, திராட்சை, கரும்பு முந்திரி ஆகிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் உள்ள சாமியார் மடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் வருகின்றபொழுது, தைப்பொங்கல் வரவிருப்பதால், இந்த ஆண்டு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று பொதுமக்கள் என்னிடத்தில்கேள்வி எழுப்பினார்கள். உங்களது கோரிக்கை அரசின் பரிசீலினையில் இருந்துகொண்டிருக்கிறது. அதுகுறித்த நல்ல அறிவிப்பை நான் இப்பொழுது செல்லும் விழாவில் அறிவிப்பேன் என்று கூறினேன். தைப்பொங்கல் பண்டிகை தமிழர்களின் தனிச்சிறப்புமிக்க பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழ் மக்களால்சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். தமிழர் மரபையும், பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா, தமிழ் மக்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.

எனவே தான், சென்ற ஆண்டு, வறட்சியின் பாதிப்பு ஏழைமக்களை பாதிக்காத வண்ணம், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக அரசு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருள்களுக்கும், பிற பணிகளுக்கும் செலவழித்துவிட்ட நிலையில், அவர்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்படும் ஏழைக்குடும்பங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரிசி அட்டைவைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், குடும்பத்திற்குத் தலா 1000 ரூபாயுடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அத்துடன் கரும்பு, முந்திரி, திராட்சை உட்பட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அதிமுக அரசு. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து