முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் டி.கல்லுப்பட்டி-பேரையூர் பகுதி வாகனங்களுக்கு வழக்கம் போல் இலவச அனுமதி தொடரும்: ஆர்.டி.ஓ.,முருகேசன் தலைமையிலான முத்தரப்பு கூட்டத்தில் முடிவு:

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி வாகனங்களுக்கும் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கும் வழக்கம் போல் இலவச அனுமதி தொடர்ந்து வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் நான்கு வழிச்சாலை டோல்கேட் செயல்பட்டு வருகிறது.திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்ட இந்த டோல்கேட்டினால் திருமங்கலம் நகர் மற்றும் டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து அப்போது தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்.208 வழியில் உள்ள டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் இலவச அனுமதி அனுமதி வழங்கப்பட்டது.இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கப்பலூரை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிர்வாகம் திருமங்கலம் நகரில் வசிப்பவர்களுக்கு மட்டும் இலவச அனுமதி வழங்கியதுடன் டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வாகனங்களுக்கு வடமாநில ஆட்களை வைத்து மிரட்டி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.அதே போல் 300மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் வடமாநிலத்தவரை வைத்து அதிரடி மிரட்டல்களுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே டோல்கேட்டில் உள்ள 10 நுழைவுகளில் 8நுழைவுகள் தற்போதைய பாஸ்டேக் முறைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதனால் 1 மற்றும் 10ம் நுழைவு வழிகள் பணம் கட்டி பயணிக்கும் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.மேலும் டூவீலர்கள் சென்றிடும் பாதையை 0 மற்றும் 11ம் பாதை என உருவாக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் ஆம்புலன்சுகள் செல்லும் பாதையாக தற்போது மாற்றப் பட்டுள்ளது.இதன் காரணமாக திருமங்கலம் நகர்,டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் மற்றும் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகத்தினர் தாங்கள் கப்பலூர் டோல்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,வடமாநில பணியாளர்களால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதாகவும்,இந்த நிலையை மாற்றி வழக்கம் போல் கப்பலூர் டோல்கேட்டில் தங்களது வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கிட வேண்டுமாறு கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.கே.வேம்புவேந்தன் சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசனிடம் புகார் மனுஅளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,காவல் ஆய்வாளர் ராஜாமணி,டோல்கேட் மேலாளர்,தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.கே.வேம்புவேந்தன்,கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா,ஒருங்கிணைப்பாளர்கள் அருண்,ஆம்ஸ்டிராங்,வாகன உரிமையாளர்கள் சரக்கு மற்றும் வாடகை வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் தினகரன்,ராஜா,குமார்,திருமங்கலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிசேகர்,திருமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் விஜயராஜன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி,முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி,முன்னாள் கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் ஸ்ரீதர்,தி.மு.க நகர பொறுப்பாளர் முருகன்,ம.தி.மு.க நிர்வாகிகள் அனிதாபால்ராஜ்,திருப்பதி,கம்யூனிஸ்ட் சுப்புக்காளை,முத்துராமன்,சந்தானம்,வழக்கறிஞர் இருளப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு காரசார விவாதங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் முன்பிருந்த நிலையின்படி திருமங்கலம் நகர்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதி வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி கப்பலூர் டோல்கேட்டில் 0 மற்றும் 11ம் பாதை வழியாக வழக்கம் போல் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.அதே போல் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி வாகனங்கள் பற்றிய முழு விபரங்களை தயார் செய்து கொடுத்து முறையான அனுமதியுடன் 0 மற்றும் 11ம் பாதை வழியாக டோல்கேட்டில் இலவச பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.அதே சமயம் டோல்கேட்டில் பணியிலிருக்கும் வடமாநில ஊழியர்கள் குறித்த விபரங்களை காவல்துறையினரிடம் வழங்குவதுடன் அவர்கள் அடையாள அட்;டை அணிந்து பணியாற்றிடவும் ஆலோசனை வழங்கப்பட்டது.இவற்றினை மீறி தகராறு செய்பவர்கள் மீது காவல்துறை உதவியுடன் கடும் நடவடிக்கை எடுத்திடவும் முடிவு செய்யப்பட்டது. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தங்களுக்கு திருப்தியளிப்பதாக தெரிவித்த சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர்,இதனை மீறி கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் செயல்பட்டால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமல் படுத்தி சுங்கச்சாடியை இடமாற்றம் செய்திட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து