முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் கிளை உத்தரவு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவித்ததற்கு எதிரான வழக்கு வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில், ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை. அதேபோல, புதிததாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பழைய மாற்று வரையறையின்படியே தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட 13,362 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் ஐகோர்ட் மதுரைக் கிளையில் முறையீடு செய்தனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலில் இட வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. மேலும், மறைமுக தேர்தல் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மறைமுக தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோரடங்கிய அமர்வு வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், பட்டியலிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து