முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடிநாள் நிதிக்கு அள்ளித்தாருங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இந்தியாவின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக கொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் கடந்த 1949-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் தினத்தையொட்டி நடக்கும் கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. 

ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை இந்திய ஜனாதிபதி, பிரதமர், அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பாளர்கள். பின்னர், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது, மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும்.  மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும். 

இந்நிலையில், டெல்லியில் நேற்று  கொடிநாள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

ராணுவ வீரர் குடும்பத்தை சேர்ந்த சிறுமி பிரதமரின் கோட்-டில் கொடியை அணிவித்தார். கொடிநாள் உண்டியலில் பிரதமர் அந்த சிறுமியின் கைகளால் பணம் செலுத்தினார்.

கொடிநாள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘நமது படைகள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தாரின் ஒப்பில்லாத வீரத்துக்கு கொடிநாள் தினத்தன்று நாம் தலைவணங்குகிறோம். நமது படைவீரர்களுக்கு உங்களது பங்களிப்பை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு ஊர்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் கொடியை அணிவித்து நிதியை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து