கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      இந்தியா
Yeddyurappa 2019 11 04

Source: provided

பெங்களூர் : கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த‌ இடைத்தேர்தலில் பா.ஜ.க. 8 முதல் 10 இடங்க‌ளில் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் முதல்வர் எடியூரப்பா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர்,கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் பா.ஜ.க, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ம.ஜ.த. ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் பதிவான 66.49 சதவீத வாக்குகள் வரும் 9-ம்தேதி (திங்கள்கிழமை) எண்ணப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.வுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்தத் தேர்தலில் பா.ஜ.க‌. 6 முதல் 8 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால், கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் சி‍ ஓட்டர் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. 8 -12 இடங்களையும், காங்கிரஸ் 2- 4 இடங்களையும், ம.ஜ.த. 1 -2 இடங்களையும் பெறும். ரிபப்ளிக் டி.வி. கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. 8 -10 இடங்களையும், காங்கிரஸ் 3- 4 இடங்களையும், ம.ஜ.த 1- 2, சுயேச்சை ஒரு இடத்தையும் பெறும். பவர் டி.வி. கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. 8 -12 இடங்களையும், காங்கிரஸ் 3- 6 இடங்களையும், ம.ஜ.த. 0- 2 இடங்களையும், சுயேச்சை ஒரு இடத்தையும் பெறும். பி டி.வி. கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. 9 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ம.ஜ.த. 2 இடங்களையும் சுயேச்சை ஒரு இடத்தையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளதால் முதல்வர் எடியூரப்பாவும், பா.ஜ.க. தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், நான் ஏற்கெனவே கூறியபடி காங்கிரசும், ம.ஜ.த.வும் படுதோல்வி அடையப்போகின்றன. அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கும் எனது தலைமையில் பா.ஜ.க. ஆட்சியே தொடரும். கர்நாடகாவின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான நிலையான நல்லாட்சியைத் தருவேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து