முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தீ விபத்தில் 11 பேரை துணிச்சலுடன் மீட்ட தீயணைப்பு வீரருக்கு குவியும் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் இளம் தீயணைப்பு வீரர் ஒருவரின் துணிச்சலான முயற்சியால் மயக்க நிலையில் இருந்த 11 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவரை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்து இவர் தான் உண்மையான ஹீரோ என பாராட்டினார்.

மத்திய டெல்லியில் பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகாலை தீ விபத்து நடந்துள்ளது. தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் இளம் தீயணைப்பு வீரர் ஒருவரின் துணிச்சலான முயற்சியால் மயக்க நிலையில் இருந்த 11 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த தொழிற்சாலையில் அதிகாலை 5.22 மணிக்கு தீப்பிடித்துள்ளது. தகவல் வந்ததும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. அங்கு வந்த இளம் தீயணைப்பு வீரர்களில் ஒருவர் ராஜேஷ் சுக்லா. அவர் அங்கு வந்த போது நெருப்பு கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. உள்ளே செல்ல பலரும் அஞ்சினர். ஆனால் தீக்காயம் ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் முதல் ஆளாக உள்ளே நுழைந்தார் சுக்லா. அவர் சென்ற நேரத்தில் அந்த அறைக்குள் இருந்த தொழிலாளர்கள் தீயின் வேகத்தால் சுவாசிக்க முடியாமல் மயக்க நிலையில் இருந்தனர். ஒரு அறையில் 11 பேர் தீ ஜூவாலைக்குள் மாட்டிக் கொண்டு, மயக்க நிலையில் இருப்பதை பார்த்த சுக்லா முதல் வேலையாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

சகவீரர்களை உஷார் செய்து அரை மயக்கத்தில் இருந்த 11 தொழிலாளர்களையும் ஒவ்வொருவராக மீட்டார். அவர்கள் அங்கு மீட்கப்பட்ட சிறிது நேரத்துக்கு பிறகே அந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. மீட்பு பணியின் போது சுக்லாவுக்கு கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சரியான நேரத்தில் உள்ளே சென்று 11 பேரை மீட்ட சுக்லாவை சக தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அங்கு கூடியிருந்தவர்களும் வெகுவாக பாராட்டினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுக்லாவை டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்து இவர் தான் உண்மையான ஹீரோ என பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து