முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது - 16-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிடுகிறது. மனுத்தாக்கல் செய்ய வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 9 புதிய மாவட்டங்கள் தவிர ஏனைய 27 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 16-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் (17-ம்தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 19-ம் தேதி கடைசி நாளாகும். முதல் கட்ட வாக்குப்பதிவு 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெறும். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி மாதம் 2-ம் தேதி எண்ணப்படும். தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4-ம் தேதியன்று முற்றுப்பெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்புகள் வழங்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் பாராளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட அதே கூட்டணி தொடரும் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக உள்ளாட்சி தேர்தல் பங்கீடு குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று தன் பங்கிற்கு நடிகர் ரஜினிகாந்தும் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து