தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் பொற்காலம் நிலவுகிறது - முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தமிழகம்
OPS speech investor meeting 2019 12 10

சென்னை : தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது என்று சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

சென்னை தலைமை செயலகத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-.

சமூக, கலாச்சார உறவையும் தாண்டி, பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான உறவு மிகவும் நெருக்கமடைந்து வருகிறது. அமெரிக்க வாழ்  இந்தியர்களின் வெற்றியும் இதற்கு காரணம். அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கா வாழும் இந்தியர்கள், முதலீட்டாளர்கள் இரு தரப்பினருமே இந்தியாவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும்,  குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் குறிக்கோள் ஆகும்.

தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகும். தமிழ்நாடு முதலீட்டிற்கு உகந்த மாநிலம். மிகச் சிறந்த நிர்வாகம், அதிக முதலீடு செய்யும் வாய்ப்புகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு சாதனைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னனி வகிக்கிறது என்று பல செய்தி குழுமங்களின் செய்திகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் தனிப்பட்ட பார்வையாளர்களும் வெளியிட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் அறிந்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி இதற்கு நிரூபணமாக உள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதற்கான உத்தரவாதமாக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும்பங்காற்றப் போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதுள்ள பார்ச்சூன் - 500 எனப்படும் உலகப் புகழ்வாய்ந்த கம்பெனிகளில், 62 கம்பெனிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தில் நிலவும்  முன்னேறிய தொழில் சார்ந்த சுற்றுச்சூழல்கள் காரணமாக அமேசான், ஐ.பி.எம், பாக்ஸ்கான், டெல், போர்டு, கேட்டர்பில்லர் மற்றும் போயிங் உள்ளிட்ட  250-க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் இங்கு முதலீடுகளைச் செய்துள்ளன. தொழில்நுட்பத் துறையில் மேலும் வளர்ச்சியை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன. சென்னைக்கு 14.8 டி.பி.பி.எஸ். அலைவரிசையுடன் வரும் 3-சப்மெரின் கேபிள்கள், மாநிலத்தில் கிடைக்கும் மிகை மின்சாரம், உயர்திறன் கொண்ட மனித வளம் ஆகியவற்றின் காரணமாக, தகவல் பூங்காக்கள்  மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள், தகவல்  தொழில் நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில்  ஏறக்குறைய 8000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம்  தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. செலுத்திய வரிகளை திரும்ப பெறுவது, முதலீட்டுமானியம், உயர்திறன் படைத்த மனிதவளம், தரமான மின் விநியோகம், நவீன உட்கட்டமைப்புகள் நிறைந்த ஆறு விமான நிலைய வசதிகள், நான்கு பெரிய துறைமுக வசதிகள், திறமைக்கும் போட்டிக்கும் இடமளிக்கும் மாநிலம் போன்ற பல்வேறு தொழில்களுக்கு உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு விரும்பும் மாநிலமாகத் திகழ்கிறது.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி, அரசு நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி, அவ்வப்போது தேவையான புதிய தொழிற்கொள்கைகளை அறிவித்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையிலும், வளர்ச்சிப் பாதையிலும் அழைத்துச் சென்றவர் எங்களது மகத்தான தலைவர்  அம்மா. அவரது வழியில் செயல்படும் எங்கள் அரசு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை மேலும் மேம்படுத்தவும்,  தொழில் வளர்ச்சியை பெருக்கவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

2018-லிருந்து புதிய தகவல் தொழில் நுட்ப கொள்கை,  புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவு பதப்படுத்தும் கொள்கை, புதிய துணிநூல் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவை மட்டுமின்றி,  மிக அண்மையில் மின்பேருந்து கொள்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது ஆகவே சந்தேகமின்றி, தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் நீங்கள் அனைவரும் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதில் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர்  நிஷா பிஸ்வாலு, அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர் அம்பிகா சர்மா, பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸின் ஆலோசகர் முராரி, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்   கிருஷ்ணன், டபே நிறுவனத்தின் தலைமை தொடர்பாளர் எஸ்.வி.ராஜீவா நாக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து