திண்டுக்கல் மாவட்டத்தில் கைகொடுத்த மழையால் செழித்து வளர்ந்த செங்கரும்பு பொங்கலுக்கு முன்பே விற்பனைக்கு வரும்

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      திண்டுக்கல்
12 karumbu

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் கைகொடுத்த பருவமழையால் பல பகுதிகளில் செழித்து வளர்ந்த செங்கரும்பு பொங்கலுக்கு முன்பே விற்பனைக்கு வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நெல், வாழை, பருத்தி ஆகிய பயிர்களும், காய்கறி, மா, பலா, வாழை ஆகிய விவசாயமும் அதிக அளவு ஏக்கர்களில் நடந்து வருகிறது. இதுதவிர மல்லிகை, சாமந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை ஆகிய மலர் சாகுபடியும், திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2 வருடமாக போதிய மழையில்லாததாலும், கடந்த வருடம் சுழன்றடித்த கஜா புயல் காரணமாகவும் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். தற்போது நிலைமை சீரடைந்து விவசாயப் பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவு ஏக்கர்களில் நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும்,வடகிழக்கு பருவமழை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு பெய்தது. சராசரி மழையளவைக் காட்டிலும் அதிகமாக பெய்ததால் மாவட்டத்தில் வறண்டு கிடந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதில் பலஅணைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு குளங்கள், கண்மாய்கள் நிரம்பி உள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முன்பே விற்பனைக்கு வரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விளைச்சல் குறைந்திருந்த நிலையிலும் போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் இந்த வருடம் அதிக விளைச்சல் அடைந்திருப்பதால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். மேலும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும். அதற்காக விவசாயிகளிடம் மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யப்படும். எனவே இந்த வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து