எனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      விளையாட்டு
tendulkar 2019 12 14

மும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம்  முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக  வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.  அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல்  ஆக்கியுள்ளனர்.

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான்  ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியர் ஒருவரை சந்தித்தேன். கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது  எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் பட்டையின் வடிவத்தை மாற்றினேன். அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ முடியுமா இணையவாசிகளே  என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  இரு தினங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து