முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மனுதாக்கல் இன்று முடிவுக்கு வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று (16–ந் தேதி) கடைசி நாள் ஆகும். இன்று இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் மனுதாக்கல் செய்யக்கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ம்  தேதிகளில் 2 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம்  தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட கடந்த வெள்ளிகிழமை வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், 6-வது நாளான நேற்று முன்தினம் 55,881 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 40,644 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 9,219 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,458 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 560 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் மனு தாக்கல் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் பகுதிகளில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டன.

இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற 19-ம் தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ம் தேதி பதவி ஏற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து