4 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்

23 E LECTORAL DRAFT ROLL RELEASE-

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவராவ் வெளியிட்டார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கொ.வீர ராகவ ராவ் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1369 பாகத்தில் 5,59,421 ஆண் வாக்காளர்களும் 5,60,959 பெண் வாக்காளர்களும் 70 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,20,450 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன்பாக 26.3.2019 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 4 சட்டமன்ற தொகுதியில் உட்பட்டு 5,60,491 ஆண் வாக்காளர்களும் 5,61,879 பெண் வாக்காளர்களும் 71 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் இருந்தனர்.
27.3.2019 முதல் 6.12.2019 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சுருக்க திருத்தத்தின் மூலம் 4,186 ஆண் வாக்காளர்களும் 4,553 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8,739 நபர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,256 ஆண் வாக்காளர்களும் 5,473 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 10,730 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைப்புகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1819 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள் தயார் செய்தல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் விபரச் சீட்டுகள் (டீழழவா ளடipள) விநியோகம் செய்தலுக்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கண்காணித்திட ஏதுவாக 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1800 425 7038 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணுடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. தேர்தல் நன்னடத்தை விதி மீறல் தொடர்பாக இதுவரை 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். இந்நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (உள்ளாட்சி தேர்தல்) ஆ.கணேசன், (பொது) ஜி.கோபு உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து