முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடல் நீர்மேலாண்மை திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள அடல் புஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

அடல் புஜல் யோஜனா என்ற திட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த அடல் புஜல் யோஜனா திட்டம் முதற்கட்டமாக குஜராத், அரியானா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டரா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், 7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8300 கிராம பஞ்சாயத்துகளின் நிலத்தடி நீர் மட்டம் கவலை அளிக்கிறது. 5 ஆண்டுகளில் 15 கோடி வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதி செய்யும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நமது நாட்டில் நிலத்தடி நீர் மேலாண்மையை வலுப்படுத்த அடல் புஜல் யோஜனா என்ற திட்டத்தை தாங்கள் தொடங்கியிருப்பதற்காக உங்களை பாராட்டுகிறேன். அதே நேரம் இந்த திட்டத்தில் தமிழ்நாடு சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழகம் நீர் தேவையுள்ள ஒரு மாநிலமாகும். நிலத்தடி நீர்மட்டத்திற்கு பெருமளவில் மழையையே நம்பி இருக்கிறது தமிழகம். தமிழகத்தில் நாங்கள் பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம். விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் கட்டுவது, ஆறுகளை புனரமைப்பது போன்ற பல திட்டங்களை நீர்மேலாண்மைக்காக நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம். தமிழக நீர்வள பாதுகாப்பு திட்டத்தையும் அமல்படுத்தி உள்ளோம். எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடல் புஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்குமாறு ஜல்சக்தி அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் வலுப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து