முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,142 உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 29, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 288, கிராம ஊராட்சி தலைவர் 385, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 3,597 பதவிகள் என மொத்தம் உள்ள 4,299 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 17,217 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 214 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17003 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் 2,677 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றதால், 403 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 3,896 உள்ளாட்சி பதவிகளுக்கு தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
 
நேற்று நடைபெற்ற .முதற் கட்ட தேர்தலில் எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 17, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 169, கிராம ஊராட்சி தலைவர் 194, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 1914 பதவிகளுக்கு என மொத்தம் 2,294 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 1, கிராம ஊராட்சி தலைவர் 3, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 148 பேர் என மொத்தம் 152 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 2,142 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில். சுமார் 8,000 பேர் வரை போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு சீராக நடைபெற்றது. கிராம புறத்தில் தங்களது பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய முதியவர்கள், பெண்கள்,இளைஞர்கள் என பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்தனர். இந்த முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் கார் மூலம் எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் தனது மனைவி, மகன், மருமகளுடன் வீட்டிலிருந்து நடந்து வந்து அருகில் உள்ள ஊராட்சி துவக்கப் பள்ளியில் வரிசையில் நின்று மதியம் 12.20 நிமிடங்களுக்கு வாக்கினை பதிவு செய்து விட்டு கிளம்பி சென்றார்.

சேலம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி வாக்கு பதிவுகள் சீராக நடைபெற்றது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சுமார் 2,800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து