முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில் கட்டணம் உயருகிறது - வாரிய தலைவர் சூசக தகவல்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார்.  

இந்தியன் ரெயில்வேயில் இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் முந்தைய காலாண்டை காட்டிலும் வருவாய் குறைந்துள்ளது. பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும், சரக்கு கட்டணம் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.  சமீபத்தில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியன் ரெயில்வேயின் 8 சேவைகளை ஒன்றாக இணைத்து ‘இந்தியன் ரெயில்வே மேலாண்மை நிறுவனம்’ (ஐ.ஆர்.எம்.எஸ்.) என்ற ஒரே நிறுவனமாக மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரெயில்வே கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. கட்டணங்கள் உயரும் என தெரிகிறது.

இணைப்பு நடவடிக்கையால் 3 உயர்நிலை அதிகாரிகளின் பணியிடங்கள் முடிவுக்கு வருகிறது. சில அதிகாரிகள் தங்கள் பணிமூப்பு பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை நெறிப்படுத்த உள்ளோம். இதுபற்றி இப்போது விரிவாக கூறமுடியாது. கட்டணத்தை உயர்த்துவது என்பது மிகவும் தீவிரமான விஷயம். சரக்கு கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. சாலை மார்க்கமாக சரக்குகள் கொண்டு செல்லப்படுவதை சரக்கு ரெயிலுக்கு மாற்றுவது தான் எங்கள் இலக்கு. இறுதி முடிவு எடுக்கும் முன்பு விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.

இதுவரை ரெயில்வே வாரியமே தேர்வுகள் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வந்தது. இனி ரெயில்வே ஊழியர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

யு.பி.எஸ்.சி. மூலம் ரெயில்வேக்கு 5 பிரிவுகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 4 பிரிவுகள் சிவில், மெக்கானிக்கல், தொலைதொடர்பு, எலெக்ட்ரிக்கல் ஆகிய என்ஜினீயரிங் தொழில்நுட்பம் சார்ந்தது. ஒன்று மட்டும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவு. இதில் கணக்கு, போக்குவரத்து மற்றும் இதர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் முதன்மைத் தேர்வு எழுதி முடித்ததும், அவர்கள் ஐ.ஆர்.எம்.எஸ். உள்பட எந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த பணியாளர் தேர்வுக்கான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

ரெயில்வேயில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள அதிகாரிகளே இனி ரெயில்வே வாரிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் கள். இணைப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அனைத்து அதிகாரிகளும் தற்போது பார்க்கும் பணியிலேயே தொடரலாம். ஒரு ஊழியருக்கு கூட பணிமூப்பு உள்பட எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து