முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ சஸ்பெண்ட் - மாயாவதி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராமாபாய் பரிஹார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மேலும், கட்சிக்கு ஒழுக்கம், கட்டுபாடு தான் முக்கியம் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சில கட்சிகள் போராட்டம் நடத்தியது. அதில், பகுஜன் சமாஜ் கட்சியும், எதிர்ப்பு தெரிவித்து, பார்லி.,யில் எதிராக ஓட்டளித்தது. கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த அக்கட்சியினர், குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு பிரிவு 14, 21க்கு எதிரானது எனவும், இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலம் பதேரியா தொகுதி அக்கட்சி எம்எ.ல்.ஏ.,வான ராமாபாய் பரிஹார் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை சுமூகமாக அமல்படுத்தியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறந்த முடிவை முன்னதாகவே எடுத்திருக்கவேண்டும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள், அத்தகைய முடிவை எடுக்க தகுதியற்றவர்கள் என தெரிகிறது. நானும் எனது குடும்பத்தினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம், என பேசியிருந்தார்.

இந்நிலையில், அக்கட்சித் தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பகுஜன் சமாஜ் என்பது ஒழுக்கம் மிக்க கட்சி. இங்கு ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாவிட்டால் அவர் எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பதேரியா தொகுதியின் எம்.எல்.ஏ., ராமாபாய் பரிஹார் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து