முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வருகிற 9-ம் தேதி முதல் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 9 - ம்தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 13 - ம் தேதிக்குள் இந்த பரிசுத்தொகுப்பை வழங்கி முடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பரிசு தொகுப்பு 9 ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை வருமாறு:-

பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு, உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் 2020 - ம் ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1000 அரசால் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. சென்னையை பொறுத்தவரை உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் துணை ஆணையர் ( நகரம்) வடக்கு மற்றும் தெற்கு அலுவலர்கள் இந்த பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பான அலுவலர்கள் ஆவர்.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகை ஆயிரத்தை வரும் 9 - ம்தேதி முதல் தொடங்கி 12 - ம்தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை பெறாத விடுபட்ட அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 13 - ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகையை வழங்கி முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கமும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டை தாரர்கள், அதிக எண்ணிக்கையில் நியாயவிலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்த தெருவாரியாக உள்ள குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் 200 அல்லது 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும். பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரொக்கத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக வங்கி மூலம் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினந்தோறும் ரொக்கமாக பெற்று நியாய விலைக்கடைகளுக்கு வழங்க வேண்டும்.

கூடுதல் பணியாளர்கள்

சென்னை மாநகராட்சி மற்றும் மதுரை, கோவை, திருச்சி, சேலம் திருநெல்வேலி திருப்பூர் , தூத்துக்குடி ஈரோடு, தஞ்சாவூர் ,திண்டுக்கல் , மற்றும் வேலூர் மாநகராட்சிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுகளை விரைவாக வழங்க ஏதுவாக கூடுதல் பணியாளர்களை அமர்த்திட கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நியாயவிலை கடைகள்  இயங்கினால் கூடுதலாக மேசை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தேவைக்கேற்ப காவல்துறையினரின் உதவியை பெற்று பயன்படுத்த வேண்டும்.பொங்கல் பரிசு தொகுப்பையும் ரொக்கத்தொகை ஆயிரம் ரூபாயையும் ஒரே நேரத்தில் வழங்கவேண்டும். தெருவாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்வதற்கான அட்டவணையை தயார் செய்து குடும்ப அட்டை தாரர்களுக்கு நன்கு அறியும் வகையில் முன்கூட்டியே நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யவேண்டும்.

ஆதார் அட்டை

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டை மூலமாகத் தான் வழங்க வேண்டும். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகை ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து