முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாட்சியில் தமிழகம் முதலிடம்: அரசு செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

மத்திய அரசின் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றமைக்கு அனைத்து துறை முதன்மை செயலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து மத்திய அரசு நிர்வாக சீர்திருத்தத்துறை ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு பட்டியல் கடந்த டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. தேசிய நல்லாட்சி தினத்தன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் சிறந்த நிர்வாகத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்தது. 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு, மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. 5.62 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 5.40 புள்ளிகளைப் பெற்று மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 5.10 புள்ளிகளைப் பெற்று கர்நாடகா மூன்றாவது இடத்திலும் 5.05 புள்ளிகளைப் பெற்று சத்தீஷ்கர் நான்காவது இடத்திலும், அதே புள்ளிகளைப் பெற்று ஆந்திரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. குஜராத், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீகார், கோவா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நிலையில், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்த நிலையை எட்ட உதவிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து செயல்பட அனைத்து துறை செயலாளர்களின் பணி அமைந்துள்ளது. நல்லாட்சி மூலமாக அனைத்து மக்களுக்கும் அனைத்து பயன்களும் கிடைக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டி, இதே போன்று தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த வாழ்த்துக் கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து