முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருகிறது: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

 சென்னை : வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், வெங்காய விலை உயர்வு, பணிஓய்வு மூலமாக ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கடுமையாக தொடர்ந்து மழை பெய்த காரணத்தினாலே வெங்காயத்தினுடைய விளைச்சல் குறைந்தது. வெங்காயம் நிலத்திலேயே அழுகி போய் விட்டது. அதனால் வெங்காய விலை உயர்ந்தது. வெங்காய விலை உயர்வு நிரந்தரம் கிடையாது. 95 நாட்களில் விளையக் கூடிய ஒரு விவசாயப் பொருள். ஆகவே, தொடர்ந்து மழை பெய்த காரணத்தினாலே, அந்த விளைநிலத்தில் உள்ள வெங்காயம் அழுகிய காரணத்தினால் தான், விலை உயர்ந்ததே தவிர இயற்கையாக விலை உயரவில்லை. இப்போது வெங்காய விலை படிப்படியாக குறைந்து கொண்டு இருக்கிறது.

பணி ஓய்வு பெறுகின்ற போது, அதற்கு முன்பாகவே தேர்வு செய்து வைத்திருந்தால், அந்த காலிப் பணியிடங்களை நிரப்பலாம் என்பதை இந்த அரசு நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, காவல்துறைகளில் எல்லாம், எப்பொழுது பணிஓய்வு பெறுகிறார்களோ, அதற்கு முன்பாகவே அந்த காலிப் பணியிடங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலே இப்பொழுது பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

உறுப்பினர் பிச்சாண்டி பேசுகின்ற போது, விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொன்னார். விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்பதற்காக, வட்டியில்லாமல் அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு. அதேபோல், புயல் வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, வறட்சி வந்தாலும் சரி, அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தந்ததும், வழங்கிய அரசும் அம்மாவுடைய அரசு தான். இதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உங்களுடைய அரசு எதுவுமே கொடுக்கவில்லை. அம்மாவுடைய அரசு தான் இழப்பீட்டுத் தொகையை தந்தது. அதற்கும் மேலாக, விவசாயிகள் பயிர் செய்து, அது கருகி போகின்ற போது, அதனால் இழப்பு ஏற்படுகிறது. அதை பயிர்க்காப்பீட்டு மூலமாக இன்றைக்கு இந்தியாவிலேயே, பயிர்க் காப்பீட்டு திட்டத்திலே அந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்ததும் அம்மாவுடைய அரசு தான். அது மட்டுமல்ல, கடந்தமுறை அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்டு மக்காச்சோளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும்கூட, பல்வேறு இடங்களிலே தமிழகத்திலே மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி, எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து, அரசாங்கமே எங்கெங்கெல்லாம் மக்காச்சோளம் அமெரிக்க படைப்புழுவால் தாக்கப்பட்டதோ, அங்கெல்லாம் மருந்து தெளித்து, விவசாயிகளுக்கு உதவிய அரசு அம்மாவுடைய அரசுதான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து