முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

450 சுயேட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் : உள்ளாட்சி தேர்தலை ஆணையம் முறையாக நடத்தி உள்ளது - *அதிகாரிகள் நீதியுடன் செயல்பட்டு உள்ளனர் - * தி.மு.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பதிலடி

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாகவே நடத்தி உள்ளது. அதிகாரிகள் நீதியுடனும்,, தர்மத்துடனும் செயல்பட்டுள்ளனர். அதனால் தான் 450 சுயேட்சைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று தி.மு.க.புகாருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பேசும் போது, உள்ளாட்சி தேர்தல் பற்றி குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுந்து ஓட்டு எண்ணும் இடத்திற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சென்று அதிகாரியை மிரட்டியிருக்கிறார். இந்த தேர்தல் நியாயமாக நடந்ததா? என்று கேட்டார்.

அப்போது அமைச்சர் பி.தங்கமணி எழுந்து, உங்கள் கட்சியை சேர்ந்த தருமபுரி எம்.பி. ஓட்டு எண்ணும் இடத்துக்கு போனாரே? அதிகாரியை பார்த்து எப்படியெல்லாம் பேசினார். அதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. ஒன்றிய வார்டு தேர்தலில் 12 ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் தோற்றோம். சுயேச்சை வெற்றி பெற்றார். இதெல்லாம் தேர்தல் நேர்மையாக நடந்தது என்பதற்கு உதாரணம். ஒருவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டோம். அதற்கு முடியாது என்று அதிகாரி கூறி விட்டார் என்று அமைச்சர் சுட்டிக் காட்டி தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடந்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயலாளரே ஒன்றிய குழு முகவர் அட்டை அணிந்து கொண்டு எல்லா இடத்துக்கும் சென்றார். காவல் துறை அதிகாரியை ஒருமையில் பேசி இருக்கிறார். உள்ளே வாக்குவாதம் செய்து மிரட்டி இருக்கிறார். இதற்கெல்லாம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர், இந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை என்று இங்கே ஒரு குற்றச்சாட்டை சொன்னார். நான் உண்மையாகச் சொல்கின்றேன். எந்த இடத்திலும், எந்தத் தவறும் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள்தான் இந்த வாக்குகளை எண்ணினார்கள். அப்படியென்றால், அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா? ஆசிரியர்கள் எண்ணினார்கள், அரசு அதிகாரிகள் எண்ணினார்கள். காலை 8 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் காலை 10 மணி வரை நின்று கொண்டே எண்ணினார்கள். தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தனை முகவர்களுமே தடுப்புக்கு வெளியேயிருந்து தான் பார்க்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, சுயேட்சையாக இருந்தாலும் சரி. ஆகவே இதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. என்னுடைய தொகுதியில் நங்கவள்ளி ஒன்றியத்திலே இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள், ஒருவர் 11 வாக்குககள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். மற்றொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இரண்டு பேரும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதை எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசுகின்ற பொழுது அது பத்திரிகைகளில் வெளிவருகின்றது. ஆகவே, இதில் பணியாற்றிய அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதற்காகத்தான் இதை நாள் தெளிவுபடுத்துகின்றேன். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும், தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்தியிருக்கின்றது. அந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டிருக்கின்றார்கள். எந்தக் கட்சியையும் சாராத 450 சுயேட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது சாதாரண விஷயமல்ல. அவர்கள் ஆளும்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது. உங்கள் கூட்டணிக் கட்சிகளில் இடம் பெற்றவர்களும் கிடையாது. எங்கள் கூட்டணிக் கட்சிகளில் இடம் பெற்றவர்களும் கிடையாது. ஆகவே, எந்த ஒரு பின்புலமும் இல்லாத சுயேட்சைகள் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், தேர்தல் ஆணையம் மூலமாக இந்தத் தேர்தல் சிறப்பாக, நடுநிலையோடு நடைபெற்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. நீங்கள் 1.59 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் இருக்கிறீர்கள். அதே போல. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் 39.60 சதவிகித வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 40.35 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75 சதவிகித வாக்குகள் தான் நீங்கள் அதிகமாக பெற்றிருக்கிறீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து