முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகர பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்படும்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழ்நெட் திட்டத்தின் மூலம் அனைத்து நகர் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் கிராமங்கள், பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

தமிழ்நாட்டிலுள்ள 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற அற்புதமான திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டு 76 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைத்தல், அக்குழு உறுப்பினர்களுக்கு வாலிபால், கபடி, கிரிக்கெட், பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், திறந்த வெளி உடற்பயிற்சி மையங்கள் அமைத்தல், போட்டிகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.  எதிர்காலத்தில், தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை மூலமாக மக்களுக்கு சிறந்த சேவை புரியும் அரசு தான் ஒரு நல்ல அரசாகத் திகழ முடியும். ஆளுமையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதிக அளவில் தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதிலும், நுகர்வதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறையும், முகமையும் மேற்கொண்ட பல்வேறு முன் முயற்சிகள் நல்ல பலனை தந்துள்ளன. பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு சான்றாக, நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் அதிக புதுமைகளை படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2018–19ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 899 கோடி ரூபாயாகும். இதனால் 6 லட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அனைவருக்கும் வளர்ச்சி என்ற எண்ணத்தை ஈடேற்றிட இல்லந்தோறும் இணையம் என்ற கொள்கையை செயல்படுத்தும் வண்ணம், அரசின் அனைத்து சேவைகளையும் கிராம மக்களும் அடையும் வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளும், பாரத்நெட் திட்டத்தை 1,815 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும், கண்ணாடி இழை கட்டமைப்பு மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் 1 ஜி.பி.பி.எஸ் அளவிற்கு குறையாமல் இணையதள வசதி வழங்கப்படும். இத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் ‘‘தமிழ்நெட்” திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்கள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து