முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கூட வழங்கவில்லை: தி.மு.க. செயல்பாடு, கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது: தமிழக காங். தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, சட்டமன்ற காங். தவைர் கேஆர். ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதே போல், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 30-ம் தேதி நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 13 மாவட்ட ஊராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அ.தி.மு.க.வின் செல்வாக்கை நிலைநாட்டி விட்டோம் என்று அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்துக்கு எதிராக தி.மு.க. செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இந்த கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி வைத்த கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. களம் இறங்கியது. இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. அந்த அறிக்கையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் கூறியிருப்பதாவது,

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கூட எங்களுக்கு வழங்கவில்லை.  மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை. ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக தி.மு.க. செயல்படுகிறது.303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் தி.மு.க.வினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர். ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இதன் மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து