முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

லண்டன் : உக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை வீசி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் ஈரானில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்தை எதிரி நாட்டு விமானம் என்று தவறுதலாக நினைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியது.இதில் 176 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். சுவீடன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயணிகளும் உயிரிழந்தனர். முதலில் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், உலக நாடுகளின் நெருக்கடியால் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ஒப்புக்கொண்டது.

இதையடுத்து ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குவிந்தனர். ஈரான் அதிபர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் நாட்டு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளதால் அந்த நாட்டுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்று உக்ரைன் கோரிக்கை வைத்து உள்ளது. மேலும், கனடாவும் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று கூறி உள்ளது.

இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. இது குறித்து உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரைஸ்டய்கோ கூறியதாவது:-

உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், நஷ்டஈடு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளன. போர் பதற்றம் காரணமாக தவறுதலாக விமானத்தை வீழ்த்திதாக ஈரான் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விமான விபத்தில் பலியானவர்களின் நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு வருகிற 16-ம் தேதி லண்டனில் ஒன்று கூடி ஈரான் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளது. இதில் கனடா, சுவீடன், உக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்பட 5 நாடுகள் பங்கேற்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து