முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.கோபாலபுரம் முனியாண்டி சுவாமி திருக்கோவில் 57வது ஆண்டு பூஜை விழா:

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்திலிருக்கும் அருள்மிகு முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பூஜை விழாவில் தமிழகம் முழுவதிலும் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்ற வழிபாடு நடத்தினர்.இந்த பூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கண்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இவ்விழாவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு.முனியாண்டி சுவாமிகள் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று சிறப்பு பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது.இந்த பூஜை விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து முனியாண்டி விலாஸ் உணவங்கங்களின் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதன்படி இந்த வருடம் 57வது ஆண்டாக எஸ்.கோபாலபுரம் முனியாண்டி கோவில் பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காப்புகட்டி விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நேற்று காலை பால்காவடி எடுத்து வந்து முனியாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபட்டனர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பழங்கள்,பூக்கள் மற்றும் அர்ச்சனை பொருட்கள் கொண்ட தட்டுக்களை கையிலேந்தி நாட்டாமைகாரர் வீட்டிலிருந்து மேள தாளங்கள் முழங்கிட கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.அப்போது தமிழர்களின் பட்டாசுகள் முழங்கிட பாரம்பரியத்;தை பறைசாற்றிடும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் வீரவிளையாட்டுக்களும் நடைபெற்றன.இதையடுத்து முனியாண்டி சுவாமி திருக்கோவிலை வந்தடைந்த மக்கள் ஊர்வலம் சுவாமிக்கு தாங்கள் சுமந்து வந்திருந்த பூக்களால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்து 16வகையான சிறப்பு அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
அப்போது பூஜை விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.மேலும் இந்த பூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு வழிபாடு நடத்திய பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோருக்கு  நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி அசைவ அன்னதான விருந்து  வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வானவேடிக்கைகளும் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.கோபாலபுரம் அருள்மிகு.முனியாண்டி சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து