முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் விலகினால் கவலையில்லை எனக் கூறுவதா? வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வுக்கு ஏன் இந்த ஞானோதயம் வரவில்லை? துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் சூடான கேள்வி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று சொல்வதா? வேலூர் லோக்சபா இடைத்தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வுக்கு ஞானோதயம் வராதது ஏன்? என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

அதிகரிக்கும் விரிசல்

இந்த நிலையில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக தி.மு.க. செயல்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடும் அளவிற்கு இக்கூட்டணியில் விரிசல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடம் ஒதுக்காதது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையால் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் பூகம்பம் வெடித்துள்ளது. பின்னர் 2 நாட்களிலேயே ஒரே குடும்பத்திற்குள் சிறுசிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் என மற்றொரு பேட்டி கொடுத்து பல்டி அடித்தார் கே.எஸ். அழகிரி. இருந்தாலும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை உறுதி செய்யும் வகையில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தி.மு.க. புறக்கணித்தது.

துரைமுருகன் பேச்சு

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட துரைமுருகன் அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலை இல்லை. அவர்கள் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் கூட அது எங்கள் ஓட்டு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை என்று காட்டமாக கூறினார். துரைமுருகன் பேசிய இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், வேலூர் பாராளுமன்ற  இடைத்தேர்தலுக்கு முன்பே இந்த ஞானோதயம் ஏன் தி.மு.க.வுக்கு வரவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார். இப்படி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பி வருவதால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து