முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

ஈராக்கில் உள்ள படைத்தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இதில் அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ம் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது. அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது. ஆனால், தங்கள் படை தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியது.

தங்கள் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிபர் டிரம்பும் கூறியிருந்தார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் வெடிக்கவில்லை. இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், அல் ஆசாத் விமானப்படை தளத்தின் மீது 8-ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப்படை வெளியிட்ட அறிக்கையில், பல வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த பிறகு ஏற்பட்ட மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பல வீரர்கள், ஜெர்மனிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில்  சேருவதற்கான உடற்தகுதி பெற்றதும், ஈராக்கிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து