அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தி.மு.க. தொண்டனுக்கு பதவி கிடைக்காது - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020
cm edapadi speech 2020 01 21

சேலம்  : அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம். ஆனால் காலம் முழுக்க உழைத்தாலும் தி.மு.க.வில் தொண்டனுக்கு உயர் பதவி கிடைக்காது என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

தமிழகம் முழுவதும் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் பலவற்றை குறிப்பிட்டு பேசினார். அதே நேரம் இப்போது வரும் படங்களில் பாடல்கள் புரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனது திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். நாட்டு மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துச் சொன்னதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். நம் நாடு படத்தில் வரும் நம் நாடு எனும் தோட்டத்திலே, நாளை மலரும் முல்லைகளே மற்றும் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற பாடலையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடலையும், சந்திரோதயம் படத்தில் வரும் புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக போன்ற பல்வேறு பாடல்களை சுட்டிக் காட்டிய முதல்வர், தனது பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆர். சமுதாய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டார் என்று புகழ்ந்துரைத்தார். அவர் வழியில் ஆட்சி செய்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு கொடுத்த பல திட்டங்களையும் முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும் அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சராகலாம். அமைச்சராகலாம். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகலாம். ஆனால் தி.மு.க.வில் அது முடியுமா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க.வில் அனைவருமே முதலமைச்சர்கள்தான். இங்கு லட்சக்கணக்கான முதலமைச்சர்கள் உள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி குறிப்பிட்டார். தி.மு.க.வில் நீண்ட காலம் மு.க. ஸ்டாலின் இளைஞரணி தலைவராக இருந்ததையும், தற்போது உதயநிதி அந்த பதவியில் இருப்பதையும் சுட்டிக் காட்டிய முதல்வர், தி.மு.க.வில் நடக்கும் வாரிசு அரசியல் பற்றியும் குறிப்பிட்டார். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, துரைமுருகனுக்கு பிறகு அவரது மகன் என்று ஒரு பட்டியலையே வாசித்தார் முதல்வர். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறிய முதல்வர், தி.மு.க.வில் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அந்த கட்சித் தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றதையும் முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார். கடன் தள்ளுபடி போன்ற பல வாக்குறுதிகளை தந்த ஸ்டாலின், இப்போது அது பற்றி கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்கிறார். இவர்கள் ஒரு நாளும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து