முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரம்: எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

மதுரை : பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக கடந்த 2018 செப்டம்பர் 15-ம் தேதியன்று காவல்துறையினருக்கும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது காவல் துறை மற்றும் ஐகோர்ட் குறித்து அவதூறான சொற்களை கூறியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பாக துரைசாமி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமயம் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வாக்குவாதம் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வெளியானதும் 2018 செப்டம்பர் 17-ம் தேதியன்று சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆனால், ஊடகங்களிடம் பேசிய எச்.ராஜா அது தனது குரல் இல்லையென மறுத்தார். இதையடுத்து, 2018 அக்டோர் 22-ம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பாக எச்.ராஜா ஆஜரானார். அவர் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்றும் தாக்கல்செய்யப்பட்டது. அந்த பிரமாணப் பத்திரத்தில், இந்த வார்த்தைகள் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் பேசப்பட்டவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். அந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அது தவறு என உணர்ந்தேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்று எச். ராஜா கூறியிருந்தார். நீதிமன்றம் என்ற இந்த அமைப்பின் கண்ணியத்தின் மீது கவலை கொண்டே இந்த வழக்கை எடுத்துக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக் கேட்ட பிறகு, அவமதிப்பு வழக்கை கைவிடுவதே சரி என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து