நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் நடத்திய சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மகத்தானது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
CM Edapadi Speech 2020 01 23

சென்னை  : நேதாஜி  நடத்திய இந்திய தேசிய ராணுவம் மற்றும் காந்திஜி  நடத்திய பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு பேசியதாவது,

இந்திய தேசிய ராணுவப் படையில் பணியாற்றிய தமிழர்களின் வீரத்தினை போற்றும் வகையில், “அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  திருவுருவச் சிலையை, திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ என தீர்மானித்து, இந்திய தேசிய ராணுவத்திற்கு புத்துயிர் அளித்து, ஆங்கிலேயரை எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக ராணுவ ரீதியாக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.         தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919-ம் ஆண்டு ஐ.சி.எஸ். தேர்வுக்கு படிக்க லண்டன் சென்றார். இந்தத் தேர்வில் இந்தியாவிலேயே நான்காம் இடம் பெற்றார். ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறையின் காரணமாக, தனது ராஜினாமா கடிதத்தை மாண்டேகு பிரபுவிடம் அளித்தார்.  உன் பெற்றோர் வருத்தப்பட மாட்டார்களா? என்று மாண்டேகு பிரபு கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்று சொல்லி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக பங்கு கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அதிக அளவில் மக்களை சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெறச் செய்தார். இதனால் நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர உணர்வு அதிகரித்து வந்தது. இவர், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பெரும் தலைவராக பார்க்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் வேகமாக வளர்ந்து வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கும் நிலைக்கு உயர்ந்தார். குஜராத் மாநிலம் அரிபுரா நகரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சுபாஷ் சந்திரபோஸ்  தலைவரானதற்கு, ரவீந்திரநாத் தாகூர் பாராட்டுக் கூட்டம் நடத்தி, அவருக்கு “நேதாஜி” என்ற பட்டத்தை அளித்தார். 

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டு காலத்தில், அவர் மிகப் பெரிய விடுதலைப் போராளி என்று இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அவரது சுற்றுப்பயணமும், பிரச்சாரமும், அனல் பறக்கும் பேச்சும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களின் உணர்வை வேகமாக தூண்டி விட்டது.  இதன் விளைவாக, 1939-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைக்காக நடந்த தேர்தலிலும் நேதாஜி வெற்றி பெற்றார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அக்கட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பசும்பொன் தேவர் திருமகனார் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.  “இந்தக் கட்சி விரைந்து செயல்பட்டு, இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தரும்” என்றார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நேதாஜியைப் பற்றி, காந்திஜி குறிப்பிடுகையில், ‘நானும் சுபாஷும் இந்திய விடுதலைக்காக போராடுகிறோம்.  ஆனால் போராடும் வழிமுறைகள் வெவ்வேறு விதமானது’ என்று குறிப்பிட்டார்.  பின்னர் நேதாஜி,  நமது நாட்டின் விடுதலைக்காக பிற நாடுகளின் உதவிகளைப் பெற எண்ணினார். அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி, தரை வழியாகவே பயணம் செய்து, ஆப்கானிஸ்தானையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார்.  நேதாஜி அவர்களை காணவில்லை என நாடே தவித்துக் கொண்டிருந்த வேளையில், ஜெர்மனியிலிருந்து நேதாஜி அவர்கள் முழங்க, மொத்த உலகமுமே இந்தப் போராளியை பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்க இந்த நிகழ்வும் ஒரு காரணமாக அமைந்தது.                                        

இரண்டாம் உலகப் போரின்போது எங்கும் போர் விமானங்கள் குண்டுகள் வீசிக் கொண்டிருந்த நேரத்தில், எதற்கும் அஞ்சாமல், ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் வழியாக மூன்று மாதம் பயணம் செய்து ஜப்பானை அடைந்து, பின் சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு ராஷ் பிஹாரி தாஸால் தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு புது ரத்தம் பாய்ச்சி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தனது சீரிய பேச்சால் ஒவ்வொரு இளைஞனையும் போரில் பங்கு பெறச் செய்தார். இந்தியா விடுதலை பெற்றால் தான், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் விரைவில் விடுதலை அடைய முடியும் என்று அறைகூவல் விடுத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும், பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் ஆயிரக்கணக்கில் இந்திய தேசிய ராணுவத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இணைந்தனர்.  இவர்களில் பலர் இந்திய தேசிய ராணுவத்தின் உயர் பதவிகளிலும் இருந்தனர். 

நேதாஜியின் போராட்டத்திற்கு தமிழர்கள் பல வழிகளில் உதவி புரிந்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து பசும்பொன் தேவர் திருமகனாரால் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். அவரது இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப் பிரிவுக்கு ராணி ஜான்சி என பெயரிட்டிருந்தார். அதன் தலைவியாக வீரத் தமிழ்ப் பெண்ணான கேப்டன் லட்சுமி இருந்தார். இந்தப் படையில் கேப்டன் ஜானகி தேவர் என்ற தமிழ்ப் பெண்மணியும் பெரும் பங்காற்றினார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் வளர்ச்சியைக் கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில், “மலேசியா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது என்றார்.  அதற்கு பதில் அளித்த நேதாஜி,  இந்த தமிழர்கள் தான் பின்னாளில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் என்று கூறினார்.  இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜி  நடத்திய இந்திய தேசிய ராணுவம் மற்றும் காந்திஜி  நடத்திய பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து