முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டில் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல (பிரெக்ஸிட்) ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு தொடங்கியது. இந்த விவகாரத்தால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் இதே விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கடந்த டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் அந்த மசோதா நிறைவேறியது. அதன்படி வரும் 31-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பிரெக்ஸிட் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது ராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அவர் ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். பிரிட்டனுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரெக்ஸிட் மசோதாவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வரும் 29-ம் தேதி ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து