முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா தலைவர்கள் தினமும் பாகிஸ்தான் பெயரை உச்சரிப்பது ஏன்? குமாரசாமி கேள்வி

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பா.ஜனதா தலைவர்கள் தினமும் பாகிஸ்தான் பெயரை உச்சரிப்பது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   

பெங்களூருவில்   நடைபெற்ற ஜனதா தளம்(எஸ்) மாநாட்டில் முன்னாள் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- 

பெங்களூருவில் குடிசைகளில் தங்கி இருப்பவர்கள் முஸ்லிம்கள் என்று நினைத்து அவர்களின் குடிசைகளை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர். ஆனால் அங்கு இருந்தவர்கள் கொப்பல், கங்காவதி போன்ற பகுதிகளை சேர்ந்த இந்துக்கள் ஆவார்கள். அவர்கள் தங்களின் குடிசை பறிபோய் விட்டதாக கண்ணீர் விட்டுள்ளனர். நமது கட்சி தொண்டர்கள் அங்கு போய் போராட்டம் நடத்தி அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  

போலீசார் மற்றும் அதிகாரிகள் வெறும் முஸ்லிம்களை மட்டும் இலக்காக கொண்டு செயல்படவில்லை. தலித்துகள், சூத்திரர்கள் என்று வேறுபடுத்தி பார்க்கிறார்கள். அமித்ஷா கர்நாடகம் வந்து பேசும்போது, விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. இத்தகைய தலைவர்களை, கட்சிகளை இன்னும் எத்தனை நாட்கள் தான் நீங்கள் ஆதரிப்பீர்கள்?. கிராமம் கிராமமாக சென்று இது குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். 

நான் ஆட்சியில் இருக்கும்போது, விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். ஆனால் இப்போது, விவசாய கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது. நான் விவசாய கடனை தள்ளுபடி செய்தும் கூட மக்கள் என்னை ஆதரிக்கவில்லை. நான் அரசியலில் இருந்து விலக மாட்டேன். இந்த அரசின் தோல்விகளை கண்டித்து நாம் தீவிரமாக போராட வேண்டும். 

கட்சியில் இருந்து வளர்ந்துவிட்டு சென்றவர்கள் எங்களை குறை கூற வேண்டாம். மங்களூரு வெடிகுண்டு சம்பவத்தை நான் இப்போது பட்டாசு சம்பவம் என்றே கூறுகிறேன். அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு நான் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் 2009-ம் ஆண்டு 9 இடங்கள் கொடுப்பதாக சோனியா காந்தி கூறினார். 2014-ம் ஆண்டு இப்போது மத்திய மந்திரியாக உள்ள ராஜ்நாத்சிங், 10 இடங்கள் ஒதுக்குவதாக உறுதியளித்தார்.  

ஆனால் அதிகாரத்திற்காக நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை. என்னை பற்றி யாராவது குறை கூறி பேசுவதாக இருந்தால் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். நான் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ரூ.300 கோடி கொள்ளையடித்து 10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியிருக்க முடியும். ஆனால் நான் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளவில்லை. நான் சட்டசபையில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தபோது, ஒரு துண்டு சீட்டை அனுப்பி, மந்திரி பதவி தாருங்கள் பா.ஜனதாவில் இருந்து விலகி விடுகிறேன் என்று கூறியவர் யார்?. காங்கிரஸ் தலைவர்களை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுவது இல்லை. ஆனால் என்னை கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். குமாரசாமி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் தினமும் பாகிஸ்தான் பெயரை உச்சரிப்பது ஏன்?. எங்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் முக்கியம். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து