சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார் - வீரதீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார் - கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      தமிழகம்
cm-governor flag republic day 2020 01 26

சென்னை : குடியரசு தின விழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நாட்டின் 71-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. முன்னதாக மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கவர்னர் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கவர்னரை வரவேற்றனர். இதையடுத்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின், அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் இடம்பெற்றுள்ள கண்காட்சி அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகள் வழங்கினார். இதன்படி, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.  இவற்றை திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் அமைச்சரின் விருது கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.  2-வது பரிசு திண்டுக்கல் காவல் நிலையம், 3-வது பரிசு தரும‌புரி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னிமலை குன்னாங்காட்டுவலசையை சேர்ந்த யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதே போன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சாமர்த்தியமாக மீட்ட நாகை தீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பிரிவில் ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்களின், வினித் சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார், தனலட்சுமி, வினோதினி, இந்திராகாந்தி மற்றும் பழனியப்பனுக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் வழங்கினார். கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது திருச்சியை சேர்ந்த ஷாஜ் முக‌மதுவுக்கு வழங்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பொதுமக்களிடையே மத நல்லுணர்வை ஏற்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதன்பின்பு தஞ்சை தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் அருணாசல பிரதேசத்தின் ரிக்கம் பதா, காஷ்மீரின் ரோவுப், தெலுங்கானாவின் மாதுரி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மதுரை கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் சார்பில் தப்பாட்ட நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதனை அங்கு திரளாக கூடியிருந்தோர் கண்டுகளித்தனர். விழாவில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து