குரூப் 4 தேர்வு முறைகேடு: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      தமிழகம்
jayakumar 2020 01 26

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. துறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்த டி.என்.பி.எஸ்.சி., அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் நாள் விசாரணையின் போது பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. இந்த மோசடி விவகாரத்தில் இவர் இடைத்தரகராக செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளிகல்வித் துறையில் பணியற்றி வரும் ஓம் காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி தேடி கைது செய்து வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.  எந்த தேர்வில் முறைகேடு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து