முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன.31 மற்றும் பிப்.1-ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் உறுதி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

திட்டமிட்டபடி, வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் செய்வது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர்.  அதன்படி, இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அதிகாரிகள், வங்கி தலைமை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலமும் கலந்து கொண்டார்.
 
இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி  போராட்டத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:

வங்கித்துறையில் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒப்பந்தம் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. நவம்பர் மாதத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக 2017-ம் ஆண்டு மே மாதத்திலேயே கோரிக்கை கொடுத்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் 12.5 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே அளிப்பதாக முன்வந்தனர். கடந்தமுறை ஒப்பந்தத்திலேயே 15 சதவீதம் அளித்தார்கள்.  எனவே, இன்றைய விலைவாசி மற்றும் வேலைப்பளு ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதைவிட கூடுதலாக தர கேட்டோம். ஆனால் வங்கி நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டத்துக்கான அவசியம் ஏற்பட்டது.

இதன்படி ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, மத்திய அரசு இதில் தலையிட்டதால், தலைமை தொழிலாளர் கமிஷனர் ராஜன் வர்மா சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நாங்கள் கலந்துகொண்டோம்.  கூட்டத்தில், ‘போராட்டத்தை கைவிடுங்கள், ஊதிய உயர்வு குறித்து பார்க்கலாம்’ என்று அதிகாரிகள் கூறினர். போராட்டத்தை தள்ளிவைத்தால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் தெரிவித்தனர்.  ஆனால், கொடுக்க முன்வரும் ஊதியத்தை உயர்த்தினால்தான், அதுகுறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறிவிட்டோம். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படவில்லை.

எனவே, திட்டமிட்டபடி வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெறும். பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த போராட்டத்துக்கு அரசும், வங்கி நிர்வாகமும்தான் பொறுப்பு. சமரச பேச்சுவார்த்தை என்று கூறி முடிவு எடுக்கப்படாததால் இந்த போராட்டம் திணிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து