முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இப்படி ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை வைத்து அதற்கன முன்மொழிவுகள் தமிழக அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனது கோரிக்கையினை ஏற்று அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 23.10.2019 அன்று தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், 27.11.2019 அன்று மேலும் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது கூடுதலாக 2 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனையாகும். இதற்கென 3,575 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி அதில் 2,145 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக 1,430 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து