முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

73-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

அண்ணல் காந்தியடிகளின் 73-வது நினைவுநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்,  அமைச்சர் பெருமக்கள் ஆகியோர், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு  இன்று (30.01.2020) காலை 8.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான தமிழக அரசு, அண்ணல் காந்தியடிகளை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில்  அன்னாரது நினைவு தினமான ஜனவரி 30-ம் நாள் அனுசரித்து வருகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். இவரது துணைவியார்  கஸ்தூரிபாய் ஆவார்.    காந்தியடிகள், தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தியடிகள், 1893-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பயணமானார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும்  அரசியல்  சக்தியாக  உருவாக்க  உதவியது. தென்னாப்பிரிக்காவில் மக்களின் உரிமைக்காகப் போராடிய காந்தியடிகள், இந்தியா திரும்பியதும் இந்தியர்களின் சுதந்திரத்திற்கானப் போராட்டத்தைத் தொடங்கினார். காந்தியடிகளுக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நட்பு  ஏற்பட்டது. காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1924-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 1930-ம் ஆண்டில், ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும்  இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தியடிகள் பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தியடிகள், மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைபயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தியடிகள், அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.  1942-ம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திலும் காந்தியடிகள் பெரும் பங்கு வகித்தார்.அண்ணல் காந்தியடிகள்,  சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைபிடித்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார்.  உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். காந்தியடிகளுக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.  மகாத்மா காந்தியடிகள் 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் நாள் அன்று தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கயிருந்த டெல்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை (இன்று)(30.01.2020) காலை 8.30 மணியளவில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து