இன்று தைப்பூசத் தேரோட்டம் பழனியில் குவியும் பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
thaipoosam palani 2020 02 07

பழனி : பழனி தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். இதனால் பழனி விழாக்கோலம் பூண்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, காமேதேனு, தங்கமயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் ஆறாம் நாளான நேற்று இரவு 8 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வெள்ளிதேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் இன்று நடைபெறுகிறது. தைப்பூசத் தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பழநி மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாளில் சண்முகநதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் சுவாமி எழுந்தருள்கிறார்.தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகள் வழியாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரி்ல் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். தேர் நிலையை வந்தடைந்தவுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து வருவதால் வழக்கமாக இரவில் நடைபெறும் தங்கத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து