8 ஆண்டுகளில் 24 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
OPS 2020 02 14

Source: provided

சென்னை : 8 ஆண்டுகளில் 24 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அரசு நிர்வாகத்தை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு செல்வதற்கு, 2019-ம் ஆண்டில் மட்டும், முன்னெப்போதும் இல்லாத அளவில் 5 புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு முதல் 16 புதிய வருவாய்க் கோட்டங்களையும், 92 புதிய வருவாய் வட்டங்களையும் இந்த அரசு தோற்றுவித்துள்ளது. புதிய மாவட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு, ஆண்டு ஒன்றிற்கு 59.73 கோடி ரூபாய் தொடர் செலவினத்தில் 835 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய மாவட்டங்களில், 550 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகங்களை அமைப்பதற்கான இடங்களை கண்டறிவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐந்து லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன் மூலம், ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மொத்த நபர்களின் எண்ணிக்கை 34.47 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரையில் 1.73 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2020–21ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு 4,315.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில ஆவணங்களை மக்கள் தாமதமின்றிப் பெறுவதை உறுதி செய்ய, இந்த அரசு இணையவழி பட்டா மாறுதல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும், நில உட்பிரிவு செய்ய வேண்டிய இனங்களில், நில அளவைப் பணிகள் அதிக அளவில் நிலுவையாக உள்ள காரணத்தால், பட்டா மாறுதல் செய்வதில் நிலுவை ஏற்பட்டுள்ளது. எனவே, நில அளவைத் துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட, உரிமம் பெற்ற நில அளவர்களை உருவாக்க இந்த அரசு அனுமதி அளித்துள்ளது. இப்புதிய நில அளவர்களின் முதல் அணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இத்துடன், நில அளவை தொடர்பான சில பணிகளை மேற்கொள்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி மறுபயிற்சியும் அளிக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பட்டா மாறுதல் வழங்கக் கோரும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வகை செய்யப்படும். 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, மொத்தமாக 24,10,107 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறை செய்வதற்கான சிறப்புத் திட்டத்தினை அரசு ஆகஸ்ட் மாதம் 2019-ல் சீரமைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் வரன்முறைப்படுத்தப்பட்டு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களில் தகுதியானவர்களுக்கு, அரசு நிலங்களில் அல்லது தனியாரிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களில் மாற்று வீட்டுமனை வழங்கப்படும். ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புறப் பகுதிகளில் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் நகர்ப்புரங்களில் செயல்படுத்தி வரும் வீட்டுவசதித் திட்டங்களின் கீழ், அத்தகைய தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுவசதி வழங்கப்படும்.

இதுவரை, ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த 1,28,463 குடும்பங்களுள், 35,470 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து