இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் கணிப்பு

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      விளையாட்டு
steve waugh 2020 02 17

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை டே- நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டே- நைட் டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேலும் டேவிட் வார்னர், ஸ்மித் அணிக்கு திரும்பியுள்ளனர். லபுஸ்சேன் சூப்பர் பார்மில் உள்ளார். இதனால் இந்தியாவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என நினைக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்புள்ளது என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஆடுகளம் குறித்து நன்றாக தெரியும். டே-நைட் டெஸ்டை பொறுத்த வரையில் இந்தியாவுக்கு அது புதிதாகும். விராட் கோலி அந்த சவாலை எடுக்கும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் உலகின் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், முடிந்த அளவிற்கு வெளிநாட்டு மண்ணில் தொடர்களை வெல்ல வேண்டும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து