கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்: 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      இந்தியா
Kerala heavy burn 2020 02 18

திருவனந்தபுரம் : கேரளாவில் தற்போது கால நிலையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. 6 மாவட்ட பொதுமக்களுக்கும் வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளா இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமாக உள்ளது. இங்கு அதிக மழை பொழிவு கிடைப்பதால் நீர் நிலைகளும் நிறைந்து மாநிலத்திற்கு பசுமை அளிக்கிறது.

ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் தற்போது கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் போல மாநிலத்தில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த வெயில் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதனால் இந்த 6 மாவட்ட பொதுமக்களுக்கும் வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கும்படியும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பகல் நேர பயணத்தை குறைத்துக் கொள்ளும்படியும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

கடும் வெயில் காரணமாக கேரளாவில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் வனப்பகுதிகளில் பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது.

நெடுமாங்காடு, கருங்குளம், காட்டுக்குளம் உள்பட பல இடங்களில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காட்டுத்தீ மேலும் பரவாமல் இருக்க வனத்துறையினர் தீ தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். ஆதிவாசிகளும் தீயை அணைக்க வன ஊழியர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனாலும் பல இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கு அடங்காமலேயே உள்ளது. இதனால் வன வளங்கள் அழிகிறது. மலை பகுதியில் வறண்ட நிலை ஏற்பட்டுள்ளதால் விலங்குகள் ஆதிவாசி கிராமங்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து